சங்கம் வளர்ந்திட...! ஜங்கம் வளரும்...!
அன்பிற்கினிய அனைத்து ஜங்கம் உறவுகளுக்கும் வணக்கம்!
நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் தனது 13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதாவது குழந்தை பருவம் தாண்டி டீன் ஏஜ் பருவத்திற்குள் நுழைந்துள்ளது. தனது குழந்தைப் பருவமான கடந்த 12 ஆண்டுகளிலேயே நமது சங்கம் செய்த சாதனைகள் ஏராளம். இனிவரும் காலங்களில் நமது சங்கம் இன்னும் அதிகமான வேகத்துடன், அதே வேளையில் விவேகத்துடனான, நம் ஜங்கம் இன முன்னேற்றத்திற்கான சேவைகளைத் தொடர்ந்து செய்யும். நமது சங்கத்தின் கடந்த கால சாதனைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. குறிப்பாக நம் ஜங்கம் சமுதாயத்திற்கென, சமுதாய மக்களின் இணைப்பு பாலமாக வெளியிடப்படும் ஒரே மாதாந்திரப் பத்திரிகை ஜங்கம் மலர். நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் துவக்கப்பட்டு மூன்றே மாதங்களில் ஜங்கம் மலரும் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகளாக ஜங்கம் மலர் பத்திரிக்கையும் தனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அங்கீகாரத்துடனும் போஸ்டல் சலுகைகளுடனும் ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது எத்தகைய சவாலானது என்று அத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே நம் சமுதாய மக்கள் சந்தா செலுத்தி ஜங்கமலர் பத்திரிக்கையை தொடர்ந்து வாங்கி படித்து பயன் பெற்று வருவதுடன், தங்களது நெருங்கிய உறவுகளையும் ஜங்கமலருக்கு சந்தாதாராக்கி, இன உணர்வை வளர்ப்பதற்கும், ஜங்கம் மலர் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது போல் சிதறுண்டு கிடக்கும் நம் சமுதாய மக்களை உணர்வூட்டி, ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறது நமது அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் என்றால் மிகையல்ல. 18 வயது நிரம்பிய ஆண் பெண் உள்ளிட்ட அனைத்து அனைத்து ஜங்கமர்களும் இச்சங்கத்தில் உறுப்பினராகி, நம் சமுதாயத்தின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றிடும் வகையில், நமது சங்கத்தை மாபெரும் இயக்கமாக வளர்த்திட உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
நமது சங்கம் துவங்கிய நாள் முதல், விவேகத்துடன் கூடிய தனது கடும் உழைப்பை நல்கி வரும் நமது பொதுச் செயலாளர் அன்பு தம்பி வேலு கருணாநிதி, செயல் தலைவர் திருப்பூர் பெரியவர் ஐயா திரு கனகசபாபதி, நிர்வாக ஆலோசகர், அருளாளர், நெமிலி திரு கிருஷ்ணமூர்த்தி, நிதி ஆலோசகர் திரு முத்துசாமி, திருமணத் தகவல் தலைவர் திரு. ஜெய்சங்கர், மக்கள் தொடர்புச் செயலாளர் திரு.கே.என்.பாபு, துணைப் பொதுச் செயலாளர் திரு. ஸி.ரி. சங்கர் மற்றும் அனைத்து நிர்வாகிகளின் பெரும் முயற்சியாலும் மேற்படி நிர்வாகிகளுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி ஊக்கமளித்து வரும் நம் சமுதாயப் பெரியவர், கௌரவத் தலைவர் ஐயா திரு. வி.பி. சுவாமி போன்றோரின் வழிகாட்டுதலாலும், ஈசனின் திருவருளாலும் இதுவரை 19 மாவட்டங்களில் நமது சங்கம் கிளை பரப்பி உள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களிலும் விரைவில் மாவட்ட நிர்வாகங்களை உருவாக்கிட உள்ளோம்.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் நமது சங்கம் விரைவில் கிளைகளை துவக்குவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. ஏனெனில், கடந்த சில மாதங்களாக மேற்படி அண்டை மாநிலங்களில் இருந்தும் நம் சமுதாய மக்கள், சென்னை மாநகரில் நடைபெறும் நமது சங்கத்தின் மாதாந்திர கூட்ட நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். ஒட்டுமொத்த நம் ஜங்கம் சமுதாய மக்களின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யும் விதத்தில், இப்படி ஒரு சங்கம் செயல்பட்டு வருவது மூலப் பண்டாரமான நம் ஈசனின் கிருபையன்றோ ...!
இச்சங்கத்தின் செயல்பாடுகளுக்கு நம் சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் ஊக்கம் அளித்து வருகின்றனர். ஆயினும் ஒரு சிலர் குறுகிய மனப்பான்மையுடன், நம் சங்கத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருவதும், செயல்பட்டு வருவதும் நமக்குத் தெரியாமல் இல்லை. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பாதுகாப்பு வளையமாகப் பாடுபட்டு வரும் ஒரு சங்கத்தின் செயல்பாடுகளை ஒரு சிலர் முடக்கிட நினைத்தால், அவர்கள் அச் சமுதாயத்தின் எதிரிகள் என்றே அறியப்படுவார்கள்.
அதுபோன்ற சூதுமதி கொண்டோர் குறித்து நம் சமுதாய மக்கள் எச்சரிக்கையாக இருந்திடக் கேட்டுக்கொள்கிறோம்.
- மிக்க அன்புடன் கே.சின்னையா